search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாங்குநேரி போலீஸ் நிலையம்"

    நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் விடுப்பு கொடுக்காததால் மனவேதனை அடைந்த போலீஸ்காரர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது30). இவர் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவரது சகோதரி குழந்தைக்கு இன்று காது குத்தும் விழா நடக்கிறது. அந்த விழாவில் தாய் மாமன் சடங்கு செய்வதற்காக வெங்கடேசை அழைத்திருந்தனர். அதற்கு செல்ல இன்ஸ்பெக்டர் சாந்தியிடம் வெங்கடேஷ் 3 நாள் விடுப்பு கேட்டிருந்தார். அதற்கு அவர் விடுப்பு கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.

    இதனால் வெங்கடேஷ் மனவேதனை அடைந்தார். இன்று காலை போலீஸ் நிலையத்தின் மாடிக்கு சென்ற அவர் அங்கு கிடந்த டியூப் லைட்களை உடைத்து உடலில் கிழித்து கொண்டார். இதனால் அவருக்கு ரத்தம் கொட்டியது. இதனை பார்த்த மற்ற போலீசார் வெங்கடேசை நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சைக்கு பின்னர் வெங்கடேசை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ்காரர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனிடையே தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரரை போட்டோ எடுப்பதற்காக பத்திரிகையாளர்கள் நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். உடனே போலீசார் அவர்களிடம் இருந்த செல்போன்களை பறித்தனர். இதையடுத்து போலீசாருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் கருணாஸ் எம்.எல்.ஏ. கார் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகன் கார்த்திக் (வயது 27), இவர் கருணாஸ் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவர் ஆவார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாங்குநேரி அருகே அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டது. இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கருணாஸ் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்திக் மற்றும் சிலர் சேர்ந்து பஸ்கள் மீது கல்வீசியது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து கார்த்திக் மற்றும் சிலரையும் நாங்குநேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது கார்த்திக் ஜாமீனில் விடுதலையாகி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே கார்த்திக் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் போலீசார் இரவு நேரங்களில் சோதனை செய்ய வந்திருப்பதாக கூறி வந்துள்ளனர்.

    இதனைதொடர்ந்து கார்த்திக், மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை (28), சுப்பையா (18) ஆகிய 3 பேரும் நேற்று இரவில் நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். ஜாமீனில் வந்த பின்னரும் எங்களை ஏன் தொந்தரவு செய்தீர்கள் என்று போலீசாரிடம் கேட்டுள்ளனர்.

    போலீசார் 3 பேரையும் வெளியேறும் படி கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். இதில் ஏற்பட்ட தகராறில் போலீசார் 3 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த கார்த்திக், சுப்பையா, சாமிதுரை மூவரும் திடீர் என தாங்கள் கொண்டு வந்திருந்த மண் எண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    இதைப்பார்த்த பொதுமக்கள் மூவரையும் மீட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுப்பையா மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் நாங்குநேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ×